Tuesday, September 6, 2011

சித்த மருத்துவப் பாடங்களில் மாற்றம் இல்லை: அமைச்சர் டாக்டர் விஜய் அறிவிப்பு


சித்த மருத்துவப் பாடங்களில் மாற்றம் இல்லை: அமைச்சர் டாக்டர் விஜய் அறிவிப்பு

First Published : 30 Aug 2011 01:29:39 AM IST

சென்னை, ஆக.29: சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை பாடத் திட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் அறிவித்தார்.
 அதேபோன்று பி.எஸ்.எம்.எஸ். (சித்த மருத்துவப் பட்டப்படிப்பு), பி.ஏ.எம்.எஸ். (ஆயுர்வேத மருத்துவப் பட்டப்படிப்பு), பி.யு.என்.எஸ். (யுனானி மருத்துவப் பட்டப்படிப்பு), பி.எச்.எம்.எஸ். (ஹோமியோபதி மருத்துவப் பட்டப்படிப்பு) ஆகியவற்றின் பெயரிலும் மாற்றம் இருக்காது என்று அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
 மாணவர்கள் போராட்டம் ஏன்? சித்த மருத்துவப் படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.), ஆயுர்வேத மருத்துவப் படிப்பு (பி.ஏ.எம்.எஸ்.), யுனானி மருத்துவப் படிப்பு (பி.யு.எம்.எஸ்.), ஹோமியோபதி மருத்துவப் படிப்பு (பி.எச்.எம்.எஸ்.) ஆகியவற்றின் பெயரில் அறுவைச் சிகிச்சைக்கு உள்ள "எஸ்' என்ற எழுத்தையும், அலோபதி பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டு மாற்றப்பட்ட பாடத் திட்டத்தையும் நடப்புக் கல்வி ஆண்டிலேயே (2011-12) அமல்படுத்தும் வகையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தீர்மானம் நிறைவேற்றியது.
 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை, அரசு யுனானி கல்லூரி மாணவர் பேரவை, அரசு இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை, நாகர்கோவில் ஆயுர்வேத அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கடந்த வாரம் ஆங்காங்கே கல்லூரி வளாகத்துக்குள் நாள் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 தலைமைச் செயலகத்தில்...இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் தலைமையில் மேலே குறிப்பிட்ட இந்திய மருத்துவ முறைகளின் மாணவர் பேரவையைச் சேர்ந்த 14 மாணவர்கள் கலந்து கொண்ட கூட்டம் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
 சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், இந்திய மருத்துவத் துறை ஆணையர் முகம்மது அஸ்லாம், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சி.வம்சதாரா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன், பதிவாளர் டாக்டர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 இந்தக் கூட்டத்தில் சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை பாடத் திட்டங்கள் மாற்றம் எதுவும் இன்றி பழைய முறையிலேயே தொடரும் என்றும் பட்டப்படிப்புகளின் பெயர்களிலும் மாற்றம் எதுவும் செய்யப்பட மாட்டாது என்றும் மாணவர்களிடம் அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் உறுதி அளித்தார்.
 விரைவில் தனி பல்கலைக்கழகம்: அமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் அமைச்சரிடம் மாணவர்கள் தெரிவித்தனர்.
 தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு எதிரான தங்களது ஆர்ப்பாட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தனர். சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கு என பிரத்யேகமாக பல்கலைக்கழகம் அமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தங்களிடம் அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் கூறியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment