Saturday, September 17, 2011

தலையங்கம்:இன்றியமையாத் தேவைகள்!

சித்த மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணம், போதுமான பேராசிரியர்கள் இல்லாததுதான். இந்தக் குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும். மீண்டும் மாணவர் எண்ணிக்கை உயரும்'' என்று அரசு அறிவித்துள்ளது.

 இந்த நிலைமை சித்த மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமன்றி, அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இருக்கிறது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி உள்பட, புதிதாகத் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில், அதன் அங்கீகாரம் நீடிக்கத் தேவையான துறைகள், மருத்துவப் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. அனுமதி பெறுவதற்காக ஒவ்வொரு முறையும் இடமாறுதல் செய்து, வேறு கணக்குகள் காட்டி, மத்திய மருத்துவக் குழுமத்திடம் அங்கீகாரம் பெறுவதற்குள் நம் சுகாதாரத் துறை அதிகாரிகள் படும்பாடு சொல்லி மாளாது.
 சட்டப்பேரவையில் பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், ""மாவட்டம்தோறும் அரசு மருத்துவமனை என்பதைப் படிப்படியாக, ஆண்டுக்கு ஒரு மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற வகையில், தேவையான வசதிகள் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தி, மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார். அவரே ஒரு மருத்துவர் என்பதால், பிரச்னை என்ன என்பது அவருக்குப் புரிந்திருக்கிறது.
 இதே புரிதலுடன் அவர் கவனம் செலுத்த வேண்டிய மருத்துவத் துறைச் சிக்கல்கள் இன்னும் பல இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை, புற்றுநோய் சிகிச்சை மையங்கள், நரம்பியல் மருத்துவ மையங்கள் தமிழ்நாட்டின் முக்கியமான நாலைந்து இடங்களில் ஏற்படுத்துவதும் தொற்றிப்பரவும் தன்மையில்லாத நோய்களான சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கான தனி மருத்துவ மையங்களை மாவட்டம்தோறும் அமைப்பதும் இன்றைய மக்களின் இன்றியமையாத தேவையாக இருக்கின்றன.
 காஞ்சிபுரத்தில் கடந்த 41 ஆண்டுகளாகப் ""பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மண்டல மருத்துவமனை'' செயல்பட்டு வருகிறது. சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள நவீன ஆய்வு வசதிகள், மருத்துவ வசதிகள் காஞ்சிபுரம் மருத்துவமனையில் இல்லை. இருந்தும்கூட, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை மக்கள் இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர். இவர்களுக்குப் போதுமான படுக்கை வசதிகளும் இல்லை.
 தமிழகத்தின் எந்தப் பகுதியில் உள்ளவர்களும் சென்னை பெருநகரை நோக்கித்தான் வர வேண்டும் என்கிற எண்ணமே இக்காலத்துக்குப் பொருந்தாது. சென்னை, சேலம், கோவை, மதுரை, தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய ஏழு மாநகரங்களிலும் புற்றுநோய், நரம்பியல் சிறப்பு மருத்துவ மையங்களை உருவாக்க வேண்டியது மிகமிக அவசியம். தேவைப்படும் நேரங்களில் சிறப்பு மருத்துவர்கள் இந்த மருத்துவ மையங்களுக்குச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டுமே தவிர, எல்லா நோயாளிகளும் சென்னைக்கு வர வேண்டும் என்பது எந்தவிதத்திலும் நியாயமாகத் தோன்றவில்லை.
 சாலை விபத்துகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2009-ம் ஆண்டில் மரணம் நேரிட்ட விபத்துகள் 12,727. இதில் இறந்தவர்கள் 13,746 பேர். 2010-ம் ஆண்டில் 14,241 விபத்துகளில் 15,409 பேர் இறந்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் சேவை இருப்பதால்தான் இந்த மரணங்கள் குறைவாக இருக்கின்றன. இல்லையெனில், மேலும் கூடுதலாகவே இருக்கும். இருப்பினும்கூட, விபத்துகளில் தலைக்காயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சையளிக்க நரம்பியல் சிறப்பு சிகிச்சை மையம் சென்னை போன்ற பெருநகரில்தான் இருக்கிறது. நெடுஞ்சாலை விபத்துகளில் பலத்த தலைக்காயம் அடைந்தவர்களை சென்னைக்கு ஆம்புலன்ஸில் கொண்டுவந்துதான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
 உதாரணமாக, சுமார் 300 கி.மீ. தொலைவுள்ள சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில், நரம்பியல் சிறப்பு மருத்துவம் பெற வேண்டுமானால் பெங்களூர், வேலூர், சென்னை ஆகிய மூன்று இடங்களைத் தவிர, வேறு ஊர்களில் இந்த வசதி இல்லை. நெடுஞ்சாலைகளில் 100 கி.மீ. இடைவெளியில் ஓர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தைத் தேர்வு செய்து, நரம்பியல் சிறப்பு மருத்துவ முதலுதவிக் கூடமாக மாற வேண்டும். இவர்களுக்கு நரம்பியல் சிகிச்சை மருத்துவர்கள் தேவையான முதலுதவி அளிப்பதும், விபத்தால் மூளைக்குள் ஏற்பட்ட அழுத்தத்தைக் குறைக்கத் துளையிடுதல் போன்ற சிகிச்சைகளைச் செய்து, மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்க வசதிகள் ஏற்படுத்துவதும் இன்றியமையாத தேவைகள். இதனால் உயிரிழப்புகள் கணிசமாகக் குறையும்.
 108 ஆம்புலன்ஸில் ஒரு விபரீதக் கட்டுப்பாடு இருப்பதாகத் தெரிய வருகிறது. விபத்து நடந்த இடத்திலிருந்து அல்லது பாதிக்கப்பட்டவர் இருக்கும் இடத்திலிருந்து அருகில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசெல்ல மட்டும்தான் 108 ஆம்புலன்ஸýக்கு அனுமதி உள்ளது. ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொரு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டுமானால், அந்த மருத்துவமனையின் ஆம்புலன்ûஸப் பயன்படுத்த வேண்டும் அல்லது தனிவாகனத்தில் நோயாளியைக் கொண்டு சென்றாக வேண்டும்.
 ஒரு பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் காயமடைந்த 50 குழந்தைகளை அரூர் மருத்துவமனைக்குக் கொண்டுபோன 108 ஆம்புலன்ஸ், அவர்களைத் தருமபுரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று கூறிவிட்டது. மருத்துவமனை ஆம்புலன்ஸில் அனைத்துக் குழந்தைகளையும் ஏற்ற முடியவில்லை. சில சிறப்பு நேர்வுகளில், 108 ஆம்புலன்ûஸப் பயன்படுத்தவும், அதற்கான கட்டணத்தை அரசு தனியாக அவர்களுக்கு வழங்கவும் வசதி இருக்குமானால், இதற்கு ஒரு தீர்வு காண முடியும்.
 மருத்துவர் ஒருவரை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக்கி இருப்பதிலிருந்தே தமிழக முதல்வர், இந்தத் துறை சார்ந்த பிரச்னைகளை அதிகாரிகளின் பார்வையில் அணுகாமல் அனுபவரீதியாக அணுக வேண்டும் என்பதில் கவனமாக இருப்பது தெரிகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறை சார்ந்த மானியக் கோரிக்கையின்போது பேசிய அமைச்சரின் பார்வையும் நோக்கமும் சரியாகவே இருக்கிறது. மேலே நாம் குறிப்பிட்டிருக்கும் பிரச்னைகளையும் கவனத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

No comments:

Post a Comment