Saturday, September 17, 2011

சித்த மருத்துவப் படிப்பு: சென்னை அரசு கல்லூரிக்கு மத்திய கவுன்சில் அனுமதி

சித்த மருத்துவப் படிப்பு: சென்னை அரசு கல்லூரிக்கு மத்திய கவுன்சில் அனுமதி
First Published : 17 Sep 2011 12:53:52 AM IST


சென்னை, செப்.16: சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் 50 சித்த மருத்துவப் பட்டப்படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.) இடங்களில் நடப்பாண்டில் மாணவர்களைச் சேர்க்க மத்திய இந்திய மருத்துவ முறை கவுன்சில் (சிசிஐஎம்) அனுமதி அளித்துள்ளது.
இதே போன்று அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் முதுநிலை சித்த மருத்துவப் பிரிவு இடங்களின் எண்ணிக்கையை 20-லிருந்து 34-ஆக அதிகரித்து சிசிஐஎம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காத்திருக்கும் பாளையங்கோட்டை: திருநெல்வேலி பாளையங்கோட்டையில் 1964-ல் தொடங்கப்பட்ட அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் 100 சித்த மருத்துவப் பட்டப்படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.) இடங்கள், 60 முதுநிலை சித்த மருத்துவப் படிப்பு (எம்.டி.) இடங்களுக்கு நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) மாணவர்களைச் சேர்க்க சிசிஐஎம் அனுமதி அளிக்கவில்லை. அனுமதியைப் பெறுவதற்கான முயற்சிகளை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் எடுத்து வருகிறார்.
ஹோமியோபதிக்கும் அனுமதி இல்லை: இதேபோன்று மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 50 பி.எச்.எம்.எஸ். இடங்களில் நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க சிசிஐஎம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
தனியார் கல்லூரிக்கு அனுமதி... கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறையில் உள்ள ஏடிஎஸ்விஎஸ் சித்த மருத்துவக் கல்லூரியில் நடப்புக் கல்வி ஆண்டில் 40 பி.எஸ்.எம்.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க அனுமதி வழங்குமாறு இந்திய மருத்துவ முறை துறைக்கு (ஆயுஷ்) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரியில் 40 பி.எஸ்.எம்.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க சிசிஐஎம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது.
அரசு முதுநிலை படிப்பு இடங்கள்: சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள முதுநிலை சித்த மருத்துவப் படிப்பு (எம்.டி.) இடங்கள் 34-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது சித்த மருத்து நிபுணர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் முதுநிலை படிப்பு (எம்.டி.) இடங்களை நடப்புக் கல்வி ஆண்டில் 46-லிருந்து 25-ஆக சிசிஐஎம் குறைத்து விட்டது.
இந்த நிலையில் சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் எம்.டி. (குணபாடம்)-10 இடங்கள், எம்.டி. (பொது மருத்துவம்)-10 இடங்கள், எம்.டி. (சிறப்பு மருத்துவம்)-5 இடங்கள், எம்.டி. (குழந்தை மருத்துவம்)-5 இடங்கள், எம்.டி. (நோய் நாடல்)-4 இடங்கள் என 34 முதுநிலை படிப்பு இடங்களில் நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க சிசிஐஎம் அனுமதி அளித்துள்ளது.

No comments:

Post a Comment