சித்தா, ஆயுர்வேத கல்லூரிகளில் சேர்க்கை தடை: மாணவர்கள் கதி?-11-09-2011
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு சித்தா, ஆயுர்வேத, ஓமியோபதி கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்க்க அனுமதி கிடைக்கவில்லை.
இதனால், இப்படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள், திரிசங்கு நிலையில் உள்ளனர்.
இந்தாண்டு அனுமதி கிடைப்பது உறுதியில்லாத நிலையில், சித்தா, ஆயுர்வேத, ஓமியோபதி படிப்பில் சேர முடியாது. வேறு எந்த படிப்பில் சேர வேண்டுமானாலும் பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து, வகுப்புகள் நடந்து வருகின்றன. இதனால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மாணவர்கள் பரிதாப நிலையில் உள்ளனர். தமிழகத்தில் சென்னை, பாளையங்கோட்டையில், அரசு சித்தா மருத்துவக் கல்லூரிகளும், நாகர்கோவில் கோட்டாறில் ஒரு ஆயுர்வேத கல்லூரியும், மதுரை திருமங்கலத்தில் ஓமியோபதி கல்லூரியும், சென்னையில் யுனானி மருத்துவக் கல்லூரியும் செயல்படுகின்றன.
இதுதவிர, தனியார் சித்தா, ஆயுர்வேத, ஓமியோபதி கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் படிக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். வழக்கமாக, இந்த மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் வாரத்தில் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்நிலையில், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி, நாகர்கோவில் கோட்டாறு ஆயுர்வேத கல்லூரி, மதுரை திருமங்கலம் ஓமியோபதி கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு அனுமதி கிடைக்கவில்லை.
கடந்த மூன்றாண்டுகளாக, இதேபோன்று அனுமதி மறுக்கப்படுவதும் பின், மாநில அரசு தலையிட்டுஅனுமதி கிடைப்பதுமான நிலை உள்ளது. ஆனால், &'இந்த ஆண்டு குறைந்தபட்ச நிபந்தனைகளை கூடபூர்த்தி செய்யாமல், அனுமதி தர மாட்டோம்&' என, இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் உறுதியுடன்தெரிவித்துள்ளது. ஆனால், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கேட்டு, மத்திய கவுன்சிலுக்கு, தமிழக அரசுகடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும், இந்திய மருத்துவ முறை மருத்துவக் கல்லூரிகளில், அக்டோபர்31க்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய கவுன்சில்அறிவுறுத்தியுள்ளது
தற்போதைய நிலையில், சென்னை சாய்ராம் சித்தா மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. இதில், 40 இடங்களில், 26 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே, கவுன்சிலிங் நடத்த முடியும். அரசு யுனானி கல்லூரியில், 40 இடங்கள் 26 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கும் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்த முடியும்.
இதற்கிடையே மற்றொரு சிக்கலாக, சித்தா மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கும், இந்திய மருத்துவ முறை மத்திய கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது. இதனால், இந்திய மருத்துவமுறையை படிக்க விண்ணப்பித்த மாணவர்கள், சேர்க்கை உண்டா, இல்லையா என, தெரியாமல் பரிதவிப்பில் உள்ளனர். பாரம்பரிய மருத்துவத்தை போற்றும் தமிழகத்தில், பாரம்பரிய மருத்துவ கல்லூரிகளுக்கு இப்படியொரு பரிதாப நிலை ஏற்பட்டிருப்பது, சித்தா, ஆயுர்வேத மருத்துவர்களை வேதனையடைய செய்துள்ளது. தமிழக அரசு, உடனடியாக தலையிட்டு, மாணவர்களின் படிப்பிற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment