Tuesday, August 20, 2013

பெருங்காயம்


பெருங்காயத்திற்கு இந்திய சமயலில் தனி இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம் தான் அந்த உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவையை அளிக்கிறது. இதனை பெரும்பாலும் பருப்பு வகைகள், சாம்பார் மற்றும் பலதரப்பட்ட காரமான சைவ உணவுகளுடன் சேர்க்கப்படுவது வழக்கம். இதற்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. இது உணவுக்குழாய் வாயுநிலையை கட்டுப்படுத்தவும், உணர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் , நுண்ணுயிர் கொல்லியாகவும், மலமிளக்கியாகவும், நரம்பு உந்தியாகவும், சளி நீக்கியாகவும் மற்றும் தூக்க மருந்தாகவும் பயன்படுகிறது.

பெருங்காயம் செரிமானமின்மைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனாலேயே இது அன்றாடம் சமைக்கும் உணவில் சேர்க்கப்படுகிறது. செரிமானப் பிரச்சனைகளான வயிற்று வலி, வாயு, குடல் புழுக்கள், வயிற்றுப் பொருமல், எரிச்சல் ஏற்படுத்தும் குடல் புண்கள் போன்ற சிலவற்றை குணப்படுத்த உதவகிறது. சிறிது பெருங்காயத்தை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து பருகினால், செரிமான தொந்தரவுகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சமையல் பொருளான பெருங்காயம் ஆண்களின் ஆண்மை குறைவை குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது ஆண்மையை தூண்டும் பாலுணர்வூக்கியாக விளங்குகிறது. சுவாச குழாய் புண்களுக்கு பயன்படுத்தப்பட்ட பழமையான மருந்து பெருங்காயம். இது ஒரு சுவாச உந்தியாக, சளியை எடுக்கும் சளி நீக்கியாகவும், நெஞ்சு அடைத்தல் நிவாரணியாகவும் செயல்படுகிறது. பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும்.

பெருங்காயம் அதிக இன்சுலின் சுரக்க வைப்பதால் அது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே பெருங்காயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இரத்த சர்க்கரை அளவை குறைக்க, பாகற்காயில் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம். பெருங்காயத்தில் உள்ள கவ்மரின் என்ற பொருள், இரத்தத்தை சுத்தம் செய்து இரத்த உறைதலை தடுக்கும். இதன் உறைவெதிர்ப்புத் தன்மை மற்றும் குணப்படுத்தும் ஆற்றல் இரத்தக் கொழுப்பைக் குறைத்து உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

இந்த வாசனைப் பொருள் நரம்பு உந்தியாக செயல்படும். எனவே இதை நரம்பு தளர்ச்சி நோய், தசை வலிப்பு, மயக்க நிலை மற்றும் இதர நரம்பு சீர்குலைவுகளுக்கு பயன்படுத்தலாம். பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி நீங்கும். அதிலும் எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால் பல் வலி நீங்கும்.

No comments:

Post a Comment