Tuesday, February 28, 2012

"சித்த'ம் இறங்காதா...?


"சித்த'ம் இறங்காதா...?

First Published : 24 Feb 2012 01:55:53 AM IST


உலகம் தமிழர்களைத் தலைநிமிர்ந்து பார்ப்பதற்கான பல்வேறு அம்சங்களில் முக்கியமான ஒன்று சித்த மருத்துவமாகும். "நலம்' என்பது விரிவான விளக்கம் கொண்டதாகும். "மருத்துவம்' என்பது அதனுள் அடங்கியுள்ள ஒரு கூறாகும். ஆனால், இன்றைக்கு மருத்துவத்துறையோ நலத்துறையாகவே பார்க்கப்படுகிறது. இது சரியான கண்ணோட்டம் அன்று.
 நாட்டுக்கு அணிகலன் பூட்ட நினைத்த வள்ளுவப்பேராசான், முதலாவதாக அணிவிப்பது "பிணியின்மை'. வருமுன் காத்தல்தான் நாட்டுக்கு அழகு சேர்ப்பதில் முதன்மையாக நிற்கும் என்று கருதிச் சொல்லப்பட்டது அது. ஏனெனில், ஓர் அறிவார்ந்த சமூகம்தான் நோயிலிருந்து தப்பிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 உலக நலவாழ்வு நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) தொட்டு, அனைத்து நல அமைப்புகளும், அரசுகளும் நோய் வந்த பின் தீர்ப்பதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை, வருமுன் காத்தலுக்கு அளிப்பதில்லை என்பது வேதனையான ஒன்றாகும்.
 சித்த மருத்துவம் என்பது வெறும் மருத்துவத்துறை சார்ந்தது அன்று. அது ஒரு முழுமையான நலவாழ்வியல் ("ஹோலிஸ்டிக் ஹெல்த் கேர்') முறையாகும். ஆனால், வேதனை என்னவென்றால் இதன் அருமையும், பெருமையும் ஆட்சியாளர்கள், உயர் அதிகாரிகள், கொள்கை வகுப்போர் என பலரும் முழுமையாக அறியாதிருப்பதுதான்.
 நாளொழுக்கம், காலவொழுக்கம், பிணியணுகாவிதி, உணவியல் நெறிமுறை, வைத்தியம், யோகம், ஞானம் என பல்வேறு கூறுகளை ஆழ அகலமாகக் கொண்டு, தட்பவெப்ப சூழலுக்கேற்ப, இயற்கையோடு இணைந்த நல்வாழ்வை மண்ணின் மைந்தர்களுக்கு வழங்க, சித்தர்கள் வழங்கிய அருட்கொடை சித்த மருத்துவம் என்பதை சமூக அறிஞர்களும், ஆர்வலர்களும்கூட உணராதிருப்பதுதான் நாட்டின் சரிவுக்குக் காரணமானவற்றில் முக்கியமானதாகும்.
 காமாலைக்கு மட்டுமல்லாமல், தேய்வு நோய் (எய்ட்ஸ்) தொடங்கி சிக்குன்குனியா, பன்றி காய்ச்சல் என மக்கள் பீதி அடைந்தபோது, அவர்களைக் காக்க நவீன மருத்துவ உலகம் தடுமாறியபோது, அச்சம் நீக்கி மக்கள் நலம் மேம்பட சித்த மருத்துவம் முன்னின்றது.
 ஆன்மிகமும், அறிவியலும் அருங்கலவையாக அமைந்திருக்கும் சித்த மருத்துவத்தைக் கற்பிக்கும் கல்வி நிலையங்களின் இன்றைய நிலை வேதனையானதாக அமைந்துள்ளது.
 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பழைமையான பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி இன்று முதலாமாண்டு மாணவர்களுக்குக் கதவடைத்து விட்டது. மத்திய அரசின் ஆய்வுக் குழு அறிக்கையின் அடிப்படையில், "ஆயுஷ்' துறை அனுமதியை மறுத்துள்ளது. மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். சட்டம் அதன் கடமையைச் செய்யும் அதேவேளையில் சித்த மருத்துவக் கல்வியைக் காக்க வேண்டியது சமூக ஆர்வலர்களின் தார்மிகக் கடமையாகும்.
 பல லட்சம் மருத்துவர்கள் தேவைப்படும் இந்த நாட்டில், பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் சூழலில் பாரம்பரிய மருத்துவம் சார்ந்த கல்லூரி மூடப்படுவது நியாயமாகுமா?
 கல்லூரி மூடப்பட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அவற்றை அவரவர் எல்லைக்குட்பட்டு, வாய்ப்பைப் பயன்படுத்திச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாது ஒருவர் மீது ஒருவரை காட்டி பழி போட்டுக்கொள்வது அழகன்று.
 படுக்கைகளில் நோயாளிகள் குறைவாக உள்ளனர் என்பது ஒரு காரணம். பரவலாக நாள்பட்ட நோய்களான பக்கவாதம், கீல்வாயு, முள்ளந்தண்டு வாதம், கரப்பான், காளாஞ்சகப்படை, மூலம் என்று பல நோய்க ளுக்கும் சித்த மருத்துவம் நோக்கி மக்கள் விழிப்படைந்து, வந்து கொண்டிருக்கும் சூழலில் படுக்கை நிரப்பப்படாததற்குக் காரணம், துறை சார்ந்த மருத்துவர்களே என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
 அரசுப் பணி வாய்ப்பு கிடைத்து, மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் மருத்துவர்களும், அலுவலர்களும் உணர்ந்து தொண்டாற்றி இருந்தால் இந்தக் குறை ஏற்பட்டிருக்காது.
 அடுத்து, ஆசிரியப் பெருமக்கள் பற்றாக்குறை, பதவி உயர்வு, பணி மூப்பு, ஊதிய உயர்வு போன்றவை நவீன மருத்துவத் துறையைப் போன்று இந்திய மருத்துவத்துறையில் முறையாக இல்லை. முதுநிலை சித்த மருத்துவம் (எம்.டி) படித்தவர்கள் பல ஆயிரம் பேர் பணியின்றி உள்ளனர். இது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எப்படி தெரியாமல் போயிற்று? அவர்களுக்கு ஏன் முறையான தேர்ந்தெடுப்பு முறை நடத்தி பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பது புரியவில்லை.
 சித்த மருத்துவத்துறையில், உதவி மருத்துவ அலுவலராகப் பணியில் சேரும் ஒருவர் 30 ஆண்டுகள் கழித்து அதே பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார். இந்த அவலம் உலகில் வேறு எந்த மருத்துவத் துறையில் நடக்கும்?
 விரிவுரையாளராக இருப்பவர் பல காலம் அதே பதவியில் இருக்கிறார். இணை பேராசிரியராகவில்லை. இணை பேராசிரியரானவர், பேராசிரியர் ஆகவில்லை. ஏன் இரண்டு அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளிலும் முறையாக முதல்வர் பதவி நிரப்பப்படாத அவலம், சென்னை மருத்துவக் கல்லூரிக்கோ, கீழ்ப்பாக்கத்துக்கோ, ஸ்டான்லிக்கோ ஏற்படுமா? அரசு அதிகாரிகளின் இந்த பாராமுகம் ஏன் என்றே விளங்கவில்லை?
 தகுதி உள்ளோரைக் கண்டறிந்து, பணி அமர்த்தி கல்வி நிலையங்களை நடத்தி பாரம்பரிய மருத்துவத்தைக் காக்க வேண்டியது அரசின் கடமையில்லையா? சீனா முதலான நாடுகளைப் பார்த்தாவது நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா? 1997-ம் ஆண்டு தமிழக அரசால் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை; அதாவது, அந்தச் சட்டத்தின் வழி அமைக்கப்பட்ட சித்த மருத்துவ மன்றம் செயலற்றுக் கிடக்கிறது. உறுப்பினர் தேர்தல்கூட நடைபெறவில்லை. இதில் அரசின் மெத்தனம் பலகாலமாக விளங்கவே இல்லை.
 வளரும் துறை, வளர்க்கப்பட வேண்டிய மருத்துவத் துறை எனக் கருதி மத்திய அரசின் "ஆயுஷ்' துறையாவது சற்று விதி தளர்த்தி அனுமதி வழங்கி வழிநடத்தக் கூடாதா? கடந்த ஆண்டுகளில் அரசுக்கே திருப்பி அளித்த நிதியை, நலிவடைந்த மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் நிதி வழங்கியாவது காக்க முன்வரக் கூடாதா? மனம் இருந்தால்தானே மார்க்கம் பிறக்க...
 வருங்கால மக்களின் நலன் கருதி செயின்ட் ஜார்ஜ் கோட்டையும், தில்லி பட்டணமும் தமிழ் மருத்துவத்தின்பால் தன் பார்வையை வைக்குமா என்பதே உண்மையான சமூக ஆர்வலர்களின் ஏக்கமாக உள்ளது.
 அகத்தியரும், திருமூலரும் விதைத்த இந்த பாரம்பரிய மருத்துவப் பயிரை காக்க அரசும், அதிகாரிகளும் முன்வர வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோள்.

 (கட்டுரையாளர்: தலைவர் -  தமிழ் மருத்துவக் கழகம், சென்னை).
 

Wednesday, February 8, 2012

சிக்கல் சித்த, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள்


சிக்கல் சித்த, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள்

First Published : 08 Feb 2012 02:17:58 PM IST


திருநெல்வேலி, பிப். 7: நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியும், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியும் இப்போது மாணவர்களின் போராட்ட களமாகியிருக்கிறது.
 இந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதால் சிக்கல் நீடிக்கிறது.
 தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தை வரும் தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் இக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்குச் செல்வதற்கு மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டுவதுபோல் ஆயுர்வேத, சித்த மருத்துவத்தை கற்றுத் தேர்வதற்கும் ஆர்வம் காணப்படுகிறது.
 தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இக் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவியர் கவுன்சலிங் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
 ஆயுர்வேத கல்லூரி: கோட்டாறு அரசு ஆயுர்வேத கல்லூரியில் 2009-ம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. முதலாண்டுக்கு 45 மாணவ, மாணவியரும், 2-ம் ஆண்டுக்கு 48 மாணவ, மாணவியரும் சேர்க்கப்பட்டனர். 3-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த 21.10.2011-ம் தேதி சென்னையில் கவுன்சலிங் நடத்தப்பட்டு 48 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
 ஆனால், அவர்களுக்கான வகுப்புகள் கடந்த 6 மாதமாகியும் தொடங்கப்படவில்லை. இக்கல்லூரிக்கான 3-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கவில்லை என்று மத்திய ஆயுஷ் துறை தெரிவித்துள்ளது மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இக் கல்லூரியை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
 இதுபோல் பாளையங்கோட்டையில் 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரம்பரியமிக்க அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இக் கல்லூரியில் முதலாம் ஆண்டுக்கு இளநிலையில் 100, முதுநிலையில் 68 மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
 இக் கல்லூரிகளில் உரிய கட்டமைப்பு வசதிகளையும், அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றும், போதிய ஆசிரியர்கள், பணியாளர்களை நியமிக்கவும், மூலிகைப் பண்ணைகளை அமைக்கவும் இங்கு ஆய்வு மேற்கொண்ட மத்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் அவ்வப்போது அறிவுறுத்தியும் கடந்த சில ஆண்டுகளாக அதன்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இப்போது மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 கோட்டாறு அரசு ஆயுர்வேத கல்லூரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
 மக்கள் பிரதிநிதிகள் அக் கல்லூரிக்குச் சென்று ஆய்வு நடத்துகிறார்கள். ஆனாலும் அடிப்படை வசதிகள்கூட அங்கு செய்யப்படவில்லை.
 போதிய மருந்துகள் தயாரித்து வழங்காததால் இக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வருவதில்லை. இக் கல்லூரிக்கான மூலிகைப் பண்ணை அமைக்க தேரேகால்புதூர் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டும் அங்கு மூலிகைகளை வளர்க்கவில்லை.
 ஏற்கெனவே பல ஆண்டுகளாக இங்கு செயல்பட்ட கோட்டாறு அரசு மருத்துவமனைக் கட்டடத்தை ஆயுர்வேத கல்லூரியாக மாற்றியுள்ளனர். இதனால் போதுமான வசதிகள் இல்லை. இங்குள்ள உள்நோயாளிகள் பிரிவில் பெரும்பாலான படுக்கைகளும் காலியாக வெறிச்சோடியிருக்கின்றன.
 பாளையங்கோட்டையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் தாற்காலிக கட்டடத்தில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.
 தற்போதும் அதே பழைய கட்டடத்தில் கல்லூரி செயல்படுகிறது. மூலிகைகள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ள புதிய இடத்தில் இந்தக் கல்லூரிக்கான கட்டடத்தை நிர்மாணிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
 ஆனால் அக்கோரிக்கை கிணற்றில் இட்ட கல்லாகவே இருக்கிறது.
 மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டிருந்த அரிய மூலிகைகள் பலவும் தற்போது காணாமல் போய்விட்டன.
 பாரம்பரியமிக்க இந்தக் கல்லூரியில் உள்ள மருத்துவமனைக்கு தொடக்கத்தில் அதிகளவில் நோயாளிகள் வந்து மருந்துகளை பெற்றுச் செல்வார்கள். சரியான விகிதத்தில் மூலிகைகளைக் கலந்து உருவாக்கப்படும் மருந்துகளை பற்றாக்குறை இல்லாமல் மருத்துவர்கள் அவர்களுக்கு அளித்ததால் நோய்களும் குணமாயின.
 இப்போது நிலைமை அப்படியில்லை. மருந்துகள் பற்றாக்குறை உள்ளது. போதுமான பணியாளர்கள் இல்லை. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இக் கல்லூரியில் போதிய அளவுக்கு ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை என்று தெரிகிறது.
 இதுபோன்று பல்வேறு குறைபாடுகளுடன் கல்லூரியும், மருத்துவமனையும் செயல்படுவதை மத் திய ஆயுஷ் துறை பலமுறை சுட்டிக்காட்டியும் அவை சரிசெய்யப்படவில்லை. இதனால் இப்போது மாணவர் சேர்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 ஒவ்வொரு முறையும் மத்திய அரசிடம் கெஞ்சி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெறுவதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியிலும், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியிலும் உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியும், போதிய ஆசிரியர்களை நியமித்தும், கட்டமைப்புகளையும், மூலிகைப் பண்ணைகளை  அமைத்தும் மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுப்பதே பிரச்னைக்கான நிரந்தர தீர்வாக அமையும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.